கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே கண்ணோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜூனி (வயது 23). கார்பெண்டரான இவர் அந்தப் பகுதியில் பர்னிச்சர் பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமலசிங் என்பவருக்கும் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஜூனி தனது கடைக்குச் சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய போது
குடிபோதையில் நின்று கொண்டிருந்த அமலசிங் மற்றும் அவரது நண்பர் யூஜின் ஆகியோர்
ஜூனியைத் தடுத்து நிறுத்திக் தகறாறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் மாறி
மாறி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து ஜூனி தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஆனால் குடிபோதையில் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமலசிங் ஜூனியைப் பின்
தொடர்ந்து அவரது வீட்டிற்கே சென்று வீட்டின் அருகேக் கிடந்த இரும்புக் குழாயைக்
கையில் எடுத்துக் கொண்டு மிரட்ட தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்குள் நின்ற ஜூனியை இரும்புக் குழாயால் தாக்கியதோடு வீட்டில் இருந்தப் பெண்களையும் மிரட்டியுள்ளார். அவர் தாக்கியதில் ஜூனிக்கு இடது கை மற்றும் உடலில் படுகாயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காகக் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமலசிங் மற்றும் அவரது நண்பர் யூஜின் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் இரணியல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வரும் நிலையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமலசிங் குடி போதையில் ஜூனியை இரும்புக் குழாயைக் கொண்டு மிரட்டி த் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இச்சம்பவம்
பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரெ.வீரம்மாதேவி







