சேலத்தில் லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவற்றை தீ வைத்து எரித்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் கடந்த டிசம்பர் மாதம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவுக்கு கர்நாடக மாநிலம் பெங்களுரில் இருந்து சேலத்திற்கு போதைப்பொருள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா உத்தரவின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் காலியாக லாரி ஒன்று வந்தது. அதனை சோதனை செய்த போது, லாரியின் அடிப்பகுதியில் ரகசிய அறை ஒன்று இருந்ததையும் அதனுள் மூட்டை, மூட்டையாக ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் இருந்ததையும் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் விசாரணைக்காக தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
லாரியை ஒட்டி வந்த தருமபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியை சேர்ந்த மாதையன் என்பவரின் மகன் ராஜா (22) கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து கிராமம் கிராமமாக சென்று கிராம சாலைகளின் வழியாக போதைபொருட்கள் கடத்தியதை ஓப்புக் கொண்டார். அவரிடம் இருந்து சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட போதைப் பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் தீ வைத்து எரித்து அவற்றை விடீயோவாக பதிவு செய்து அதனை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.







