காதலன் வீட்டுமுன் தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர்…

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து
கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சுகின்.
பி.எஸ்.சி பட்டதாரியான இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் சென்னை தாம்பரம்
பகுதியில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியான
பணியில் சேர்ந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக பணியாற்றும் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த
பி.ஏ பட்டதாரி பெண் மணிமொழி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரும் நெருங்கி
பழகி வந்த நிலையில் பழக்கம் காதலாக மாறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு கணவன்
மனைவி போல் சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதில் மணிமொழி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கர்ப்பமானதாகவும் காதலன் சுகின் மணிமொழிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மணிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுகினை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மணிமொழியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுகின் கடந்த 2-ம் தேதி ரயில் மூலம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். ரயில் நிலையத்தில் வைத்து மணிமொழியைத் தாக்கி அங்கேயே விட்டு விட்டு சுகின் தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து மணிமொழி கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளித்து போலீசார்
நடவடிக்கை எடுக்காத நிலையில் ஊருக்கு திரும்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று நாகர்கோவில் வந்து ஆன் லைன் மூலம் கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சுகின் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் தற்போது நாகர்கோவில் அழைத்து வந்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும் புகாரளித்துள்ளார்.

மேலும் தன்னை ஏமாற்றித் தலைமறைவான நெய்யூர் பகுதியில் உள்ள தனது
காதலன் சுகின் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு சுகினின்
உறவினர்களிடம் வாக்குவாதம் செய்து நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை
நடத்தி, அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகாரளிக்க கூறிய நிலையில்
அவர் மறுத்து விட்டார்.காவல்துறையினர் அந்த பெண் மற்றும் காதலனின் உறவினர்களைக் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.