சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனத்தைக்
கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை,கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட
பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
அவ்வாறு 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வளையமாதேவி கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இன்று என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது.
இப்பணிக்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் காவல்துறை பாதுகாப்பு
போடப்பட்டிருந்தது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்
ஜெகன் கார்த்தி, உள்ளிட்ட சுமார் 30 பேர் வளையமாதேவி கிராமத்திற்கு
செல்வதற்காக சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலை பகுதிக்கு சென்றனர். அப்போது
காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது
செய்தனர்.
இதுபோல் வளையமாதேவி கிராமத்தில் நிலத்தை சமன் செய்யும் பணிக்கு எதிர்ப்பு
தெரிவித்து பாமக வினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து வளையமாதேவி மெயின்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்த முயன்ற பாமகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அனைவரும் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் வருகின்ற 11 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க மாவட்ட செயலாளர் பேட்டியளித்துள்ளார்.
-ரெ.வீரம்மாதேவி
என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: