கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை நாய் உதவியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற வாலிபர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடையநல்லூர் வன சரக அலுவலர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகப்படும்
வகையில் வேட்டை நாயுடன் சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை
நடத்தியுள்ளனர்.
விசாரணையில், அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அந்த நபரைக் கடையநல்லூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர், அச்சன்புதூர் பகுதியைச் சேர்ந்த தவசிகன் என்பவரது மகன் சங்கர் (வயது 28) என்பதும், அவர் நீண்ட நாட்களாக தனது வீட்டில் வேட்டை நாய் ஒன்றை வளர்த்து, அதை வைத்து அவ்வப்போது வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சிக்காக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும், தற்போது அவர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனவிலங்குகளை
வேட்டையாடுவதற்காகவே நாயை அழைத்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் படி சங்கரைக் கைது செய்த
கடையநல்லூர் வனத்துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.
மேலும், இதுபோன்ற வன உயிரினங்களை வேட்டையாடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







