நாட்டின் உயர்ந்த பொறுப்புக்கு வருவேன் என கனவில் கூட நினைத்ததில்லை என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் தனது சொந்த கிராமத்துக்கும் சென்றுள்ளார். உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் பரான்ங் (Paraunkh) என்ற கிராமம் அவருடைய சொந்தக் கிராமம் ஆகும். குடியரசு தலைவர் ஆன பிறகு முதன்முறையாக அவர் தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்றார். அங்கு சென்ற அவர், உணர்ச்சிவசப்பட்டவராக, முதலில் மண்ணை தொட்டு வணங்கினார்.
பிறகு தம்மை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, நான் எங்கிருந்தாலும் என் கிராமத்து மண்ணின் வாசனையும் அங்கு வசிப்பவர்களின் நினைவுகளும் எப்போதும் என் நெஞ்சில் இருக்கும். என்னை பொறுத்தவரை, பரான்ங் சாதாரண கிராமம் மட்டுமல்ல, அது என் தாய்மண், இங்கிருந்து உத்வேகம் பெற்றுதான் நாட்டுக்கு சேவை செய்ய சென்றேன்.
கிராமத்தில் இருந்து வந்த சாதாரண சிறுவனான நான், நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புக்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், நமது ஜனநாயக அமைப்பு அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறினார். முன்னதாக அவரை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.







