இந்தியா முன்னேறி வரும் நாடாக இருக்கிறது என்றும், 2047ஆம் ஆண்டில் இந்தியா உலகின் தலைமை நாடாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கணித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆகியோர் கலந்துகொண்டனர். தேர்தலை முறையாக நடத்தி, வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளை தடுத்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட சேலம் , தர்மபுரி, தென்காசி, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான விருதுகளை ஆளுநர் ரவி வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா முன்னேறி வரும் நாடாக இருக்கிறது. 2047 ஆம் ஆண்டில் இந்தியா, உலகின் தலைமை நாடாக இருக்கும். 18 வயதை பூர்த்தி செய்யும் அனைவரும் தங்களின் கடமை என கருதி வாக்களிக்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய முயற்சிக்கும், தேர்தல் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட வேண்டும்.
வாக்குச் சீட்டு முறையில் இருந்து முன்னேறி இ.வி.எம் இயந்திரங்கள் வந்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். பெண்கள், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள். தமிழகத்தில் 1.8 கோடி புதுவாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை உள்ளது. அவர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை, பூர்த்தி செய்யக் கூடியவர்களை தேர்வு செய்வார்கள். வாழ்க தமிழ்நாடு வளர்க பாரதம்!” என்று பேசினார்.