பனை சாகுபடி, மேம்பாடு மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், பனை மேம்பாட்டு இயக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம், 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்களுக்கு 510 உபகரணங்கள், பனைமரம் ஏறுவதற்கு 1,000 உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டதுடன், பனை மரம் ஏறும் சிறந்த இயந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பனை சாகுபடி
பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பனை பொருட்களின் மதிப்புக்கூட்டல் ஊக்குவிக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டலுக்கான கொட்டகை, உபகரணங்கள், பாதுகாப்பாக மரம் ஏறுவதற்குரிய உபரகணங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு பனைப்பொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் பனை வெல்லம், பனங்கற்கண்டு, பிறபனை சார்ந்த பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுவதோடு மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பனை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்
மேலும், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் குறுகிய காலப்பனை ரகங்களை உருவாக்குதல், மதிப்புக்கூட்டுதல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதற்கு மேலும் முக்கியத்துவம் அளித்து புதிய குட்டை ரக பனை ரகங்களை உருவாக்கி அவற்றின் நடவுப் பொருட்களை கிடைக்கச் செய்வது, நடவு, ஊட்டச்சத்து, நீர்மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிமுறைகளை நெறிப்படுத்துவது, நீரா பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பனை மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வதற்கான தர ஆய்வுக்கூடம் அமைக்கவும், மதிப்புகூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார். இதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.