தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் வேளான் பட்ஜெட் தொடர்பாக தவெக அரசு சார்பில் மண்டல வாரியாக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்
வேளாண்மை நலத்துறை சார்பில் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் வேளாம் துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஶ்ரீநாத், ராஜலக்ஷ்மி, கமலி, விஜய் பாலாஜி , ரஞ்சித் குமார், மதன் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் வினோத், “இதுவரை நான்கு மண்டல அளவிலான கூட்டம் நடத்தி உள்ளோம். சென்னையை தவிர மற்ற மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கியுள்ளோம். விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டு வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் நிதிநிலையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். விவசாயிகள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் கவனமாக பரிசிலிக்கப்படும். குளிர் சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது விவசாயிகளின் வாழ்வதாரமும் உயர வேண்டும். பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.




