மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
சாலமன் பாப்பையா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது தமிழ்ப் புலமையாலும், நகைச்சுவையினாலும் தமிழ்ப் பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே கொண்டு சேர்த்தவர். இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். பல தமிழ் நூல்களையும், உரைகளையும் எழுதியவர். தமிழ் இலக்கியத்திற்கும். கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு பத்மஸ்ரீ, கலைமாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
தனது இளம் வயதில் இளமாறன் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் பேசியவர். 2025ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டின் போது நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்று பேசியவர். ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், முற்போக்கு சிந்தனையாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற கலைக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும். தமிழ் ஆர்வலர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




