விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 2013 , 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தகுதி தேர்வுகளில் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி பலமுறை தேர்ச்சி பெற்ற 21,515 ஆசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.
இதற்கிடையே 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-ன் மூலம் தகுதி தேர்வு மட்டுமல்லாமல் நியமனத் தேர்வு என்று ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தி அதிலும் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 8 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இந்த நியமனத் தேர்வு நடைபெறுள்ளது.
2021ல் 730, 2022ல் 3987, 2023ல் 6553 என மொத்தம் 2023 ஆம் ஆண்டு வரையில் 11,270 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இன்று வரையில் நிரப்பப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு 2768 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு நியமனத் தேர்வின் மூலம் 20 மாவட்டங்களில் மட்டுமே பணி நியமனங்கள் செய்யப்பட்டது.
அரசின் சார்பில் செய்திகளின் அடிப்படையில் தற்போது தொடக்க கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 26,428 ஆகும்.
எனவே, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தேர்வில் 21,515 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 80% மேல் பெண்கள் உள்ளனர். 13 ஆண்டுகளாக காத்திருக்கும் இவர்களின் ஏழ்மையான குடும்பச் சூழல், வாழ்வாதாரம், கல்வி மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இவர்களை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




