“என் இனிய பொன் நிலாவே” பாடலின் பதிப்புரிமையை இளைராஜா கோர முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஒலிப்பதிவு உரிமை மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட இளையராஜா தொடர்ந்த மேல்முறையீடு தோல்வியில் முடிந்துள்ளது.

இளையராஜா இசையில் வெளியான பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலின் ஒலிப்பதிவு மற்றும் வரிகளின் மீதான பதிப்புரிமையை அவர் தனிப்பட்ட முறையில் கோர முடியாது என்று கூறி, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. காப்பிரைட் சட்டத்தின்படி ஒரு இசையமைப்பாளர், பாடலின் இசைக்கு மட்டுமே உரிமையாளர் ஆவார்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் திட்டவட்டமாக விளக்கியுள்ளனர். 

திரையுலகில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் ‘பாடல் பதிப்புரிமை’ விவாதத்திற்கு இந்தத் தீர்ப்பு ஒரு மிக முக்கியச் சட்ட விளக்கமாக மாறியுள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டு வெளியான ‘மூடுபனி’ திரைப்படத்தில், இளையராஜா இசையமைத்து, கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய “என் இனிய பொன் நிலாவே” பாடல் இன்றளவும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், அண்மையில் வெளியான ‘அகதியா’  திரைப்படத்திற்காக, இந்தப்பாடலை இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா மீண்டும் ரீமிக்ஸ் செய்து, விஜய் ஜேசுதாஸ் பாடியிருந்தார். இதற்குத் தங்களின் அனுமதியின்றி இளையராஜா உரிமம் வழங்கியதாகக் கூறி, ‘மூடுபனி’ படத்தின் இசை உரிமையைப் பெற்றுள்ள ‘சரிகம இந்தியா லிமிடெட்’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

தனி நீதிபதி வழங்கிய இடைக்கால உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை நீதிபதிகள் சி. ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்துள்ளது. இளையராஜாவின் மனுவை நிராகரித்து டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் அளித்துள்ள முக்கியச் சட்ட விளக்கங்கள்:

இந்தியப் பதிப்புரிமைச் சட்டம்  பிரிவு 2(p)-இன் கீழ், ‘இசைப் படைப்பு’  என்பது ஒரு பாடலின் இசை மற்றும் மெட்டுக்களை மட்டுமே குறிக்கும். அதில் வரும் வரிகளோ அல்லது இறுதி ஒலிப்பதிவோ இசையமைப்பாளரைக் கட்டுப்படுத்தாது. சட்டப்பிரிவு 2(f)-இன் படி, ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த ஒலிப்பதிவு உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளரையே சாரும்.

தயாரிப்பாளர் கடந்த 1980-ஆம் ஆண்டே முறைப்படி இந்த உரிமையைச் சரிகம நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொடுத்துள்ளதால், சரிகம நிறுவனமே இதன் தற்போதைய சட்டபூர்வ உரிமையாளர் ஆகும். இளையராஜா இப்பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டுமே, அவர் பாடலாசிரியர் இல்லை. எனவே, இப்பாடலின் வரிகளைப் பயன்படுத்துவதற்கும் அவர் உரிமம் வழங்க முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு காப்பிரைட் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை முன்வைத்து, பழைய பாடல்களுக்குக் கூடுதல் உரிமைகளைக் கோர முடியாது என்றும் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த வழக்கில் இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்வாதி சுகுமாரும், சரிகம நிறுவனம் தரப்பில் முன்னணி மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக்கும் ஆஜராகி தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
‘அகதியா’ திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், நீதிமன்ற உத்தரவின்படி 30 லட்சம் ரூபாய் உரிமக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால், அந்தப் பாடலின்றியே தங்களது திரைப்படத்தை ஏற்கனவே வெளியிட்டு வழக்கை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒலிப்பதிவு உரிமை மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட இளையராஜா தொடர்ந்த மேல்முறையீடும் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.