சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







