திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர் .
இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கனல் கண்ணனின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக இந்து மாநில முன்னணியின் மாநில கட்சி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி வரவேற்பதாகவும் அவர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால் இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.







