ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கல்லு ப்பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.தென்னரசு, ஈரோடு கிழக்கில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் சரியான முறையில் உள்ளது. காலை முதல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை வரிசையில் நின்று ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.
இது அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது. பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, உள்ளிட்டவை மக்கள் மத்தியில் எதிர்ப்பாக உள்ளது. திமுகவினர் தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றவில்லை. டீசல் விலையை குறைக்கவில்லை. சொன்னது எதுவும் செய்யவில்லை.
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கடுமையான போட்டிகள் சமாளிப்பது தான் வீரம். ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்பது தவறான தகவல். 25,000 வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.