28.6 C
Chennai
April 25, 2024
தமிழகம் செய்திகள்

பிறந்த நாள் விழாவுக்காக பேனர் வேண்டாம் – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1953 மார்ச் 1 உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னை தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர் தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருந்தார். தாய்மையின் அரவணைப்பில் உலகைக் கண்ட அந்தக் குழந்தை, உங்களில் ஒருவனான நான்தான்.

தந்தை, கழகத்தின் முன்னணித் தலைவர். பொதுவாழ்க்கைக்கு முதலிடம். இல்வாழ்க்கை இராண்டாவதாக தான் என்று வாழ்வியலை அமைத்துக் கொண்டவர். சோவியத் யூனியன் எனும் வல்லரசின் அதிபராக – உலகத்தின் கவனத்தை ஈர்த்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் மறைவெய்தியதையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர் கருணாநிதி பங்கேற்றிருக்கிறார். மகன் பிறந்த விவரம் ஒரு சிறிய தாளில் எழுதித் தரப்படுகிறது. அதனைப் படித்தவர், தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவிக்கிறார்.

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவானது, பொதுவாழ்க்கைக்கான மேடையில் தான். அதனால், சிறு வயது முதலே பொதுவாழ்வையே முதன்மையாக்கிக் கொண்டேன். கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பைத் தொடங்கி, என் பொதுவாழ்க்கையின் பயணத்தைத் தொடர்ந்தேன். கழகத் தலைவரின் மகன், தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகன் என்ற அடையாளத்தைப் பின் தள்ளி, இயக்கத்தின் தொண்டன் என்ற முறையிலேயே என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணித்தது.

கட்சிப் பொறுப்பாக இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பாக இருந்தாலும் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு… என்பதையே எனது செயல்திட்டமாகக் கொண்டுள்ளேன். அதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விலைமதிப்பில்லாத சொத்து. தலைவர் அவர்களிடமிருந்து பெற்ற பாராட்டுப் பத்திரம்.

அந்த உழைப்பை இப்போதும் தொடர்கிறேன். என் சக்திக்கு மீறி உழைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறுவது இடைத்தேர்தல் தான் என்றாலும், அது கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி பற்றி மதிப்பீட்டிற்கான எடைத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்திடும் வகையில் உழைப்பு தொடர்ந்தது.

ஆட்சிப் பொறுப்பில் நாம் அமர்வதற்கு முன்பு, அரசியல் களத்தில் நமக்கு எதிர்நிலையில் இருப்பவர்கள், என் மீது எண்ணற்ற விமர்சன அம்புகளை எய்தார்கள். இப்போதும் எய்கிறார்கள். கழகத்தின் மீது வதந்திகளைப் பரப்பினார்கள். பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள். பொல்லாங்கு பேசினார்கள். என்னைவிட என் மீது அக்கறையாக ஜோதிடம் – ஜாதகம் எல்லாம் கணித்தார்கள். அவை எதுவும் என்னைத் தளரச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக அவை எனக்கு உரமாகி என்னைத் தழைக்கச் செய்தன. மேலும் மேலும் என்னை உழைக்கச் செய்தன. மக்களின் நம்பிக்கையைப் பெருக்கிடச் செய்தன. அதன் விளைவுதான், மக்களின் தீர்ப்பு நம் கையில் ஆட்சிப் பொறுப்பை வழங்கியது.

எல்லாருக்கும் எல்லாம் என்கிற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இந்தியா முழுவதும் உற்று நோக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அயராது உழைக்கிறோம். மக்களின் நம்பிக்கைக்குரிய அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது.

என்னுடைய 70-வது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கழகத்தின் தலைவர் என்ற முறையில் தான் என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இந்தளவில் அனுமதி வழங்குகிறேன்.

சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மார்ச் 1 அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருன் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் – நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் வரவேற்புரை ஆற்றுகிறார்.

சிறப்புமிக்க அந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எம்.பி., ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பிகார் மாநில துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் அதற்கான எதிர்காலச் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றுகிறேன். மா.சு. நன்றியுரை ஆற்றுகிறார்.

உங்களில் ஒருவனான என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் கழக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துகளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி – சமத்துவம் – சுயமரியாதை – மாநில உரிமை இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன். நம்முடன் கொள்கைத் தோழமை கொண்டுள்ள இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவோம்… என்பதே உங்களில் ஒருவனான உங்களின் முதன்மைத் தொண்டனான என்னுடைய பிறந்தநாள் செய்தி. அதற்கேற்ப அயராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். இலட்சிய உணர்வு கொண்ட உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாகக் கருதுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading