திங்கட்கிழமை அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்… யாரும் ஓடிவிடக்கூடாது – முதலமைச்சர் விஜய்!

உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் கூறுகிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, “இஸ்லாமிய சிறைவாசிகள் குறித்து பேசினோம். அவர்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறைக் கைதிகளை விடுவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு விடுவித்தால் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்களுக்கு கடந்த ஆட்சியிலேயே அனுமதி வழங்கப்படவில்லை. 2023-24ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பிரச்சினை கடந்த ஆட்சியில்தான் உருவானது. 100 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய முடியாது. ஆனால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியும். டிஜிபி நியமிக்கப்படவில்லை. நாங்கள்தான் டிஜிபியை நியமித்தோம். சாம்சங் விவகாரத்தில் சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி,

“யார் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டுமோ, அவர்கள் பதில் சொல்ல மறுக்கிறார்கள். முதல்வர் தயாராக இருப்பதாகக் கூறுகிறீர்கள். அப்போது பேசலாம் என்றார்.

சபாநாயகர்:

திங்கட்கிழமை பதிலுரை உள்ளது. யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி,

“டிஜிபி நியமிக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள். சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றபோது ஒரு பட்டியலை அனுப்பியிருந்தோம். ஒன்றிய அரசு தலையீடு இருப்பதாகக் கருதினோம். மாநில அரசுக்கு ஏற்ற அதிகாரியை நியமித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டார் என்றார். போக்சோ குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விழிப்புணர்வு காரணமாகவே புகார்கள் மற்றும் வழக்குகள் பதிவு அதிகரித்துள்ளன. எனவே, போக்சோ குற்றங்கள் குறித்து பொதுவாகக் கூறக்கூடாது. போதைப்பொருள் ஒழிப்பை எங்கள் ஆட்சியில் சரியாக செய்யவில்லை என்றால், எங்கள் ஆட்சியில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி காவல் ஆணையராகவும், டிஜிபியாகவும் ஏன் நியமித்துள்ளீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் விஜய்:

“உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் கூறுகிறேன். நான் இல்லாவிட்டாலும் யார், யார் என்ன கேள்வி கேட்டார்கள் என்பது எனக்கு வரும். அதற்குரிய பதிலைத் தருகிறேன். உங்கள் சார்பாக ஒரு Promise’ கேட்கிறேன். யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்றார்.

உதயநிதி :

கடைசியாக யார் ஓடிப்போனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கூறியிருந்தால் பிரச்சினை வந்திருக்காது. நான் போகிறேன் 3 நாட்களுக்குப் பிறகு வருகிறேன் என்ற வகையில் செல்கிறார். அப்போதே கூறினேன். தயாராகி வாருங்கள் என்று தான் சொன்னேன் என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்:

50 உறுப்பினர்களுக்கு இப்படியென்றால், இங்கு தனியாகவே 107 உறுப்பினர்கள் உள்ளனர். ஒப்பிட்டுப் பேசுவது என்பது மரபு. அரசு என்பது கூட்டு பொறுப்பு. கடந்த ஆட்சியில் துணை முதல்வர் வராதபோது, நானே வாசிக்கிறேன்’ என அப்போதைய முதல்வர் வாசித்துள்ளார்.

மேலும், நீட் ஒழிப்பு குறித்த ரகசியம் தெரியும் என்கிறீர்கள். சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகிறீர்கள். திமுகவில் இருந்த ஜாபர் சாதிக்கிடம் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் குற்றப்பத்திரிகையை ஆன்லைனில் வெளியிட்டுள்ளீர்கள் எனக் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், ஊர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டது மிகப்பெரிய தவறு. முக்கியமான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், மெரினாவை பூட்டியது கடந்த ஆட்சியில்தான் என்றும், திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் திமுகவினர்தான் என்றும் குற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் பேசிய ஒபிஎஸ்:

“யாரும் ஓடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

சபாநாயகர் : அதை நீக்கத் தேவையில்லை என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி:

சிங்கப்பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. அவர் பட்டிமன்றத்தில் வந்திருப்பதால் வரலாறு பேசுகிறார். கடந்த காலத்தில் எங்கள் அரசைப் பாராட்டிப் பேசியுள்ளார். முதல்வர் எங்களை ஓட வேண்டாம் என்று கூறிவிட்டு அவரே ஓடிவிட்டார். பதில் சொல்லட்டும் என்றார்.

இதன் பிறகு பேசிய ஆதவ் அர்ஜூனா:

3 நாட்கள் விடுமுறை உள்ளது. நன்றாகத் தயாராகி வாருங்கள். கடந்த 3 ஆண்டுகளிலும் ஒரே எண்ணிக்கையில் கொலைகள் பதிவாகியுள்ளன. காவல்துறையில் தவறு நடந்தாலும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் காவல் மரணங்கள் குறித்து உண்மைக்கு மாறாகக் கூறப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்

அமைச்சர் ஆனந்த் பேசுகையில்:

தமிழக முதல்வர் எப்போது பேச வேண்டும், எங்கு பேச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நீங்கள் பேசியதால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுத்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 37 நிபந்தனைகள் விதித்து, காலையில்தான் அனுமதி வழங்குவீர்கள். சில நேரங்களில் அனுமதி வழங்கிவிட்டு பின்னர் மறுப்பீர்கள். எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கியிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

உதயநிதி:

நாங்கள் யாரையும் பற்றி பேசவில்லை. அதனால் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். சட்டப்பூர்வமான இடத்தில் அனுமதி வழங்கப்பட்டது. பெரும்பான்மை இல்லாத ஆட்சி நடக்கிறது. எங்களுடைய தயவில் தான் ஆட்சி நடக்கிறது என்றார்.

ஆதவ் அர்ஜூனா: இன்று சபாநாயகர் எதிர்கட்சிக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது. எங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதற்காகவே காவல்துறை SOP-வை உருவாக்கியது. காவல்துறை எங்களுக்கு எதிராகச் செயல்பட்டது. எங்களைப் பற்றி பேசியிருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பீர்கள் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.