கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து…

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களால் சிகிச்சை பெறுவோரின் உறவினர்கள் அச்சம் அடைந்த்துள்ளனர். இந்த நிலையில், எக்கியர்குப்பத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளச்சாராய விற்பனை காவல் துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும், அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியாமல் ஒரு சொட்டு கூட விற்பனை செய்ய முடியாது. பல ஆண்டுகளாக இந்த இரண்டு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முழு காரணம் தமிழக அரசு தான். அரசின் முழு தோல்வியாக இதை பார்க்கிறேன். கள்ளச்சாராயத்தினை தடுக்க தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால் இரண்டிற்குமே வித்தியாசம் இல்லை என தெரிவித்தார்.

தமிழக அரசு உடனடியாக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மது இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலை அதிமுகவும், திமுகவும் உருவாக்கி உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் டாஸ்மாக்கில் 9 ஆயிரம் கோடி விற்பனை உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார். டாஸ்மாக்கில் விலை ஏற்றம் செய்யபட்டதால் விவசாயிகள், மீனவர்கள், கூலி தொழிலாளிகள் கள்ளச்சாராயத்திற்கு மாறியுள்ளதாகவும், மதுவை திணிக்கிறஅரசாக தமிழக அரசு உள்ளது என்றும் கடுமையாக சாட்டினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கள்ளச்சாராய விவகாரத்தில் இரண்டு மாவட்ட எஸ்பிக்கள் மீதான நடவடிக்கை மட்டும் போதுமானது அல்ல. மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மாற்றி சமூக அக்கறை உள்ளவரை நியமனம் செய்ய வேண்டும். இரண்டாண்டு காலம் முடிந்த நிலையில் இதுவரை மதுவிலக்கு தொடர்பாக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியை முன்வைத்த அன்புமணி, மக்களை காப்பாற்றுவது திமுக அரசின் நோக்கம் அல்ல. மூன்று தலைமுறையினரை மதுவிற்கு மாற்றியுள்ளனர்.

இந்தியாவிலையே அதிக விபத்துகள் நடைபெறுகிற மாநிலமாகவும், விதவைகள் உள்ள மாநிலமாகவும் தமிழகம் தான் உள்ளது. மதுவிலக்கு கொண்டு வர முதன்மை கட்சியாக பாமக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 24 மணி நேரம் மதுவிற்பனை சந்து கடைகளில் நடைபெறுகிறது. இது அரசுக்கும் தெரியும். தெரிந்தேதான் ஒரு பெரிய ஊழல் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.