விழுப்புரம் கள்ளச்சாராய அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ர்ந்துள்ள நிலையில் இது தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
இந்த விவகாரத்தில் கள்ள சாராய வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உறுதியளித்துள்ளார். மேலும் கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கள்ளச் சாராயம் அருந்தி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இந்த விவகாரத்தில் விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கள்ளச்சாராய வழக்கில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே அமரன், ரவி ,முத்து கைது செய்யப்பட்ட நிலையில் ஆறுமுகம் மன்னாங்கட்டி ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், விஷச்சாராயம், போலி மற்றும் அயல்மாநில மதுபானங்கள் விற்பனை செய்தால் 9042469405 என்ற வாட்சப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் கொடுப்பவரின் ரகசியம் காக்கப்படும் எனவும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







