பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்ததோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். தொடர்ந்து இன்று மாலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”பாஜக மாநில தலைவர் அண்ணாமலையையும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. மாநில மற்றும் தேசிய நலன் குறித்து மனம் விட்டு பேசினோம். தேசிய நலனை கருத்தில் கொண்டு, பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பேன் என்று முன்னர் கூறியிருந்தேன். அதே நிலைப்பாடு தான் இப்பொழுதும் உள்ளது” என்று தெரிவித்தார்.








