இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 10-ம் தேதி மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங்கிற்கு (Utpal Kumar Singh) யஷ்வந்த் வர்மா கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் நவம்பர் 19 – வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் செல்லாததாகிவிட்டதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜினாமா குறித்து யஷ்வந்த் வர்மா விளக்கம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217(1)(a) பிரிவையும், 1978-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய ‘Union of India vs Gopal Chandra Mishra’ வழக்கின் தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ராஜினாமா செய்தால், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோ அல்லது வேறு எந்த அதிகாரியின் அனுமதியோ தேவையில்லை என்றும், ராஜினாமா தானாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான அரசியலமைப்பு விதிகள் பதவியில் இருக்கும் நீதிபதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பதவியை விட்டு விலகிய ஒருவருக்கு எதிராக அந்த நடவடிக்கையைத் தொடர முடியாது என்றும் வாதிட்டுள்ளார்.
விசாரணைக் குழுவின் அறிக்கையை ஏற்க மறுப்பு!
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள் விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளில் ஏப்ரல் 9-ம் தேதி வரை மட்டுமே தான் பங்கேற்றதாக யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்ற விதம் குறித்து ஏற்கெனவே ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்ததாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை என்றும், இனி நடைபெறும் எந்தவொரு விசாரணை நடவடிக்கையிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது கடிதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் வழங்கி, இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
யஷ்வந்த் வர்மா மீது 3 குற்றச்சாட்டுகள் நிரூபணம்?
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்த மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு, யஷ்வந்த் வர்மா மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்த அறிக்கை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்தின் இருப்பு, அதன் மூலாதாரம் மற்றும் உரிமை குறித்து உரிய விளக்கம் அளிக்கத் தவறியது, முக்கிய ஆதாரங்களைப் பாதுகாக்கத் தவறியது, விசாரணையின்போது அளித்த விளக்கங்கள் திருப்திகரமாக இல்லாதது ஆகியவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
எரிந்த பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்!
கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது எரிந்த நிலையில் பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உள்விசாரணைக் குழு இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் முறைகேடு நடைபெற்றதற்கான முடிவுகள் கிடைத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, யஷ்வந்த் வர்மாவை பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைத்தார்.
அப்போது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, பின்னர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 2025 ஏப்ரல் 5-ம் தேதி அங்கு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும், நீதித்துறை பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தார். இதற்கிடையே, அவரைப் பதவியிலிருந்து நீக்கக் கோரி சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து, நீதிபதிகள் விசாரணைச் சட்டம், 1968-ன் கீழ் மக்களவை சபாநாயகர் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த யஷ்வந்த் வர்மா!
தனக்கு எதிராக விசாரணைக் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, விசாரணை நடைமுறையில் நியாயமும் உரிய சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, விசாரணையிலிருந்து அவர் விலகினார். சம்பவம் நடைபெற்றபோது தான் டெல்லியில் இல்லை என்றும், தனது இல்லத்தில் பணம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், விசாரணைக் குழு தனது விசாரணையைத் தொடர்ந்து முடித்து அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை!
யஷ்வந்த் வர்மாவின் ராஜினாமா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ராஜினாமா செய்ததன் மூலம் அவர் நீதிபதி பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை நாடாளுமன்றம் இனி தொடர முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின்படி, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜினாமா செய்வதன் மூலமாகவோ அல்லது நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும் இயலாமை காரணமாக நாடாளுமன்றத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்படுவதன் மூலமாகவோ பதவியை இழக்கலாம். இந்தியாவில் நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கும் நடைமுறை பொதுவாக ‘இம்பீச்மென்ட்’ (Impeachment) என்று குறிப்பிடப்பட்டாலும், நீதிபதிகளை நீக்குவது தொடர்பான அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் அந்தச் சொல் இடம்பெறவில்லை.




