அமெரிக்கா – கிரீன்லாந்து ராணுவ ஒப்பந்தம்.. டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல்!

அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே பல மாதங்களாக பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற வாக்கெடுப்பில், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 109 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. ஏற்கெனவே இந்த மாத தொடக்கத்தில் கிரீன்லாந்து நாடாளுமன்றமும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்திருந்தது.

மார்கோ ரூபியோ வரவேற்பு!

டென்மார்க் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தத்திற்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்திருப்பது நம் அனைவரையும் மேலும் பாதுகாப்பாகவும், வலிமையாகவும் மாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை நவீனப்படுத்துவதுடன், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ (NATO) நட்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை விரிவுபடுத்தவும், அங்குள்ள ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தொலைதூர பிடுஃபிக் (Pituffik) விண்வெளி ராணுவத் தளத்தில் அமெரிக்கா தனது செயல்பாடுகளை நவீனப்படுத்த முடியும்.

மேலும், தெற்கு கிரீன்லாந்தில் உள்ள நர்சார்சுவாக் (Narsarsuaq), கிழக்குப் பகுதியில் உள்ள மெஸ்டர்ஸ்விக் (Mestersvig) ஆகிய இடங்களில் பாதுகாப்பு மண்டலங்களை அமைக்கவும் அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கூடுதல் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கவும், பிற பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

நேட்டோ நாடுகளுக்கு மட்டுமே ராணுவத் தளங்கள் அமைக்க அனுமதி!

1951-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பிராந்தியங்களில் நேட்டோ அமைப்பின் பாதுகாப்புப் பங்களிப்பை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், நேட்டோ கூட்டணியின் பாதுகாப்புக்காக கிரீன்லாந்தில் அமெரிக்கப் படைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘கோல்டன் டோம்’ (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கக்கூடும்.

அதேபோல், கிரீன்லாந்தில் ஆளில்லாத அல்லது ஆள்களுடன் செயல்படும் ராணுவக் கட்டமைப்புகளை அமைக்க நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மூன்று தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் ராணுவ, மூலோபாய ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டென்மார்க், கிரீன்லாந்து தலைவர்கள் வரவேற்பு!

டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சன் (Mette Frederiksen) நாடாளுமன்றத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் டென்மார்க்கின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும், கிரீன்லாந்து மக்கள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையையும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரெடெரிக் நீல்சனும் (Jens-Frederik Nielsen) இந்த முடிவை வரவேற்றுள்ளார். கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் மக்களிடையே நிலவிய சூழலில், இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். டென்மார்க்குக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஹோவரியும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை வரவேற்றுள்ளார்.

கிரீன்லாந்தின் கட்டுப்பாடு டென்மார்க்கிடமே இருக்கும்!

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த அனுமதித்தாலும், கிரீன்லாந்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கிரீன்லாந்து தொடர்ந்து டென்மார்க்கின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தூதரக ரீதியிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்ட பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். மேலும், எதிர்காலத்தில் கிரீன்லாந்து சுதந்திரம் பெற்றாலும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.