ரோஹிங்கியா இனப்படுகொலை.. மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

2017-ம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ அடக்குமுறை இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) காம்பியா தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் (Rakhine) மாகாணத்தில் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக 2019-ம் ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டது. 15 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 9 நீதிபதிகள் மியான்மர் இனப்படுகொலை செய்ததாக ஆதரவாகவும், 6 நீதிபதிகள் எதிராகவும் வாக்களித்தனர்.

10,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல்!

2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ‘கிளியரன்ஸ் ஆபரேஷன்’ (Clearance Operation) நடவடிக்கையின்போது சுமார் 10,000 ரோஹிங்கியா பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான 8.15 லட்சம் மக்களில் இது சுமார் 1.2 சதவீதம் எனவும் நீதிமன்றத் தலைவர் யூஜி இவாசாவா தீர்ப்பை வாசிக்கும்போது குறிப்பிட்டார். மேலும், ரோஹிங்கியா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகப் பரவலான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகள் மீதும் கொடூரத் தாக்குதல்!

மியான்மர் ராணுவப் படைகள் குழந்தைகள் மீது மிகக் கொடூரமான வன்முறைகளை நிகழ்த்தியதாகவும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கித் தப்பியோடிய ரோஹிங்கியா மக்களையும் தாக்கியதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாலியல் வன்முறைகள் மற்றும் பிற தாக்குதல்கள் மூலம் ரோஹிங்கியா மக்களின் உடல் மற்றும் மனநலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டதுடன், அவர்களின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் நோக்கத்திலும் செயல்பாடுகள் நடைபெற்றதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்த ஆதாரங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், ரோஹிங்கியா மக்களில் கணிசமான பகுதியினரை அழிக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக முடிவு செய்துள்ளது.

7.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேற்றம்!

2017-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அடக்குமுறையைத் தொடர்ந்து, படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் மற்றும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் 7.30 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். தற்போது சுமார் 12 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) பகுதியில் உள்ள நெருக்கடியான முகாம்களில் வசித்து வருகின்றனர். மேலும், 1982-ம் ஆண்டு மியான்மர் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

காம்பியா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகள் 1948-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை (Genocide Convention) மீறுவதாகக் கூறி, காம்பியா (The Gambia) 2019 நவம்பர் மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஆதரவுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மியான்மர் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது. அரக்கான் ரோஹிங்கியா விடுதலைப் படை (ARSA) நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருந்தது.

தீர்ப்பை அமல்படுத்துவதில் சவால்!

சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடியது. இறுதியானது என்பதால் மேல்முறையீடு செய்ய முடியாது. இருப்பினும், தீர்ப்பை அமல்படுத்துவதற்கு நீதிமன்றத்திடம் தனிப்பட்ட காவல்துறையோ, ராணுவமோ கிடையாது. மியான்மர் அரசு தீர்ப்பைப் பின்பற்ற மறுத்தால், ஐ.நா. சாசனத்தின் 94(2)-வது பிரிவின் கீழ் காம்பியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அணுகலாம். அப்போது பொருளாதாரத் தடைகள் அல்லது பிற தூதரக நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு கவுன்சில் முடிவெடுக்கலாம். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

காசா விவகாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

மியான்மருக்கு எதிரான இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கூறி தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான வழக்கிலும் இந்தத் தீர்ப்பின் சட்ட விளக்கங்கள் கவனிக்கப்பட உள்ளன. அதேபோல், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய 2022-ம் ஆண்டு படையெடுப்பு தொடர்பான வழக்கிலும் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.