ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் நவம்பர் 19, வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் PF சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
90% வரை PF பணத்தை எடுக்கலாம்!
55 வயது வரையிலான EPF சந்தாதாரர்கள் தங்களது PF கணக்கில் குறைந்தபட்சம் 25% தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தற்போது உள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25%-ல் இருந்து 10%-ஆகக் குறைக்க EPFO ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், தகுதியுள்ள சந்தாதாரர்கள் தங்களது PF சேமிப்பில் இருந்து 90% வரை பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு முன்பு அதிகபட்சமாக 75% வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி இருந்தது. எனினும், இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு, பொருந்தக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணம் எடுக்க முடியும். ஓய்வுபெறும் வயதை அடைந்த பிறகு முழு PF தொகையையும் திரும்பப் பெறுவதற்கான நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
வேலை இழந்தால் 2 மாதங்களில் PF பணம்!
வேலையை இழக்கும் ஊழியர்கள் PF பணத்தை எடுப்பதற்கான காத்திருப்பு காலத்தையும் EPFO குறைத்துள்ளது. இதற்கு முன்பு, வேலை இழந்தவர்கள் உடனடியாக 75% PF தொகையை எடுத்துக்கொள்ளவும், மீதமுள்ள 25% தொகையை ஓராண்டுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது வேலை இழந்த பிறகு முழுமையான PF தொகையைப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் PF பணம்!
ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்புத் தொகையை ஒரே நேரத்தில் முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவணையாகப் பெற்றுக்கொள்ளும் Systematic Withdrawal Plan (SWP) வசதிக்கும் EPFO ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஓய்வுபெறும் சந்தாதாரர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை என PF பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம், மீதமுள்ள PF தொகை தொடர்ந்து முதலீட்டில் இருந்து வருவாய் ஈட்டும் வாய்ப்பும் இருக்கும். மேலும், பணம் பெறும் காலத்தில் சந்தாதாரர் உயிரிழந்தால், அவருடைய நாமினி அல்லது சார்ந்திருப்பவர்கள் மீதமுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொடர்ந்து தவணை முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
AIF முதலீட்டுக்கு ஒப்புதல்!
EPFO-வின் புதிய முதலீட்டு நடவடிக்கையாக, புதிதாகக் கிடைக்கும் நிதியில் இருந்து 3% வரை தகுதியுள்ள Alternative Investment Funds (AIFs) திட்டங்களில் முதலீடு செய்ய கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் மூலமாக இந்த முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
EDLI திட்டத்தில் புதிய மாற்றங்கள்!
EDLI Scheme, 2026-ல் திருத்தங்களை மேற்கொள்ளவும் மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, நிலுவையில் உள்ள பழைய விலக்கு தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கும், காலாவதியான விலக்குகளைப் புதுப்பிக்கத் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட இடைக்கால காலத்திற்கான பங்களிப்பு, வட்டி மற்றும் அபராதத் தொகைகளிலும் சலுகை வழங்கப்பட உள்ளது.
மேலும், 27 நிறுவனங்கள் தங்களது விலக்கு அனுமதியைத் திரும்ப ஒப்படைப்பது மற்றும் 4 நிறுவனங்களின் விலக்கு அனுமதியை ரத்து செய்வது தொடர்பான முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.5,996 கோடி PF சேமிப்புத் தொகை EPFO நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இதனால் 1,44,437 உறுப்பினர்களின் கணக்குகள் EPFO நேரடி நிர்வாகத்திற்கு மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF கணக்கு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன!
EPFO-வின் CITES 2.0 எனப்படும் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைத் தளத்தின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தளம் செயல்படுத்தப்பட்ட பிறகு, தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும் PF பணம் பெறும் கோரிக்கைகளின் அளவு 39%-ல் இருந்து 71%-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் 23%-ல் இருந்து 7.82%-ஆகக் குறைந்துள்ளது. PF கோரிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான சராசரி காலமும் 11.15 நாட்களில் இருந்து 2.57 நாட்களாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPS ஓய்வூதிய உயர்வு குறித்து முடிவு இல்லை!
இதற்கிடையே, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான EPS-ல் எந்தவிதமான ஓய்வூதிய உயர்வும் அறிவிக்கப்படவில்லை. அதிக ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், 2026-27 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளுக்கும் EPF, EPS மற்றும் EDLI திட்டங்களின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.




