அமெரிக்கா, சீனா, ரஷ்யா முத்தரப்பு சந்திப்பு: அமைதி பிரகடனம் வெளியீடு!

அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பு நிறைவடைந்த நிலையில் நான்கு அம்சங்களை வலியுறுத்தி ‘அமைதியை நோக்கிய பிரகடனம்’ வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முன்னெப்போதும் இல்லாத முத்தரப்பு சந்திப்பு இன்று நிறைவடைந்தது. இதன் முடிவில், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்வைத்தும் ‘அமைதியை நோக்கிய பிரகடனம்’ வெளியிடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் நான்கு அம்சங்கள் கொண்ட இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பது மற்றும் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகள் தங்களது அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் மூன்று தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள கைலின் வில்லாவில் இந்த முத்தரப்புச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பின் தொடக்க உரையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகளில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பை வலியுறுத்தினார். மேலும், உலகளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் மூன்று நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்புகள் முக்கியப் பங்காற்றக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், உலகின் முக்கிய வல்லரசுகளுக்கு இடையே அமைதியான உறவுகள் நிலவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உலகளாவிய நிலைத்தன்மைக்கு உதவும் என்றும், மோதல்கள் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த முத்தரப்புச் சந்திப்பின்போது உலகளாவிய மற்றும் பிராந்தியப் பொருளாதார உறவுகள், எரிசக்திப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க முன்மொழிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.