மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காட்டியதால் கிடைத்தது அல்ல. நாட்டு மக்களுக்காக, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும், வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். அப்போது அவர், குடியரசுத் தலைவரின் உரை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக இருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது மட்டுமல்லாது, நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசு தலைவர் உயர்த்தியுள்ளார். இன்று, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடி சமூகத்தில் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.
5-வது பொருளாதார நாடாக இந்தியா
குடியரசு தலைவரின் உரையின் போது சிலர் அதில் பங்கேற்காமல் தவிர்த்தனர். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை அவர்கள் அவமதித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தினர். தற்போது இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
உறுதியான இந்தியா
100 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா என்ற தொற்று நோய் உலகையே ஆட்டிப் படைத்தது. மறுபுறம் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்தது. இந்த நெருக்கடியான நிலையிலும் கூட இந்தியா நிலைத்தன்மையுடன் உறுதியாக இருந்தது.
இந்தியா மீதான உலகின் பார்வை மாறியுள்ளது…
இன்று, உலகம் நாடுகள் அனைத்தும் இந்தியாவின் மீது நேர்மறையான பார்வையையும், அதிக அளவிலான நம்பிக்கையையும் கொண்டுள்ளன. இன்று ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா பெற்றுள்ளது. இது நமது தேசத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த பெருமை. ஆனால் இதுவும் சிலரை காயப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்.
இன்று உலகில் உள்ள அனைத்து நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களும், வல்லுநர்களும் இந்தியாவின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இது எதனால் நடந்தது? ஏன் இந்தியாவை உலகமே நம்பிக்கையுடன் திரும்பி பார்க்கிறது?
அவநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் சிலர் தான் இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நாட்டு மக்களின் சாதனைகளை அவர்கள் பார்க்கவில்லை. இந்தியா இந்த அளவிற்கு பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் 140 கோடி மக்களின் உழைக்கும், முயற்சியும் தான். அவர்கள் இந்த சாதனைகளை பார்ப்பதே இல்லை.
2010-ம் ஆண்டில் காமென்வெல்த் போட்டி நடந்த போது இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகள் தெரியவில்லை. ஊழல் தான் உலகிற்கு தெரியவந்தது. 2014ம் ஆண்டு முந்தைய ஆண்டுகள் தொலைந்து போன ஆண்டுகளாகவே இருக்கின்றன. அதன் பிறகு உள்ள காலங்கள் இந்தியாவின் காலமாகவே இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மக்களவையில் பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மோடியை திட்டினால் தான் வழி கிடைக்கும் என நினைக்கிறார்கள்..
ஆணவத்தில் தங்களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று நினைப்பவர்கள், மோடியை திட்டினால் தான் ஒரு வழி வரும் என்றும், மோடி மீது பொய்யான, முட்டாள்தனமான சேறு பூசினால் தான் பாதை அமையும் என்றும் நினைக்கிறார்கள். 22 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தவறான எண்ணம் உள்ளது.
மக்களுக்காக எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன்..
மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காட்டியதால் கிடைத்தது அல்ல. எனது நாட்டு மக்களுக்காக, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக எனது ஒவ்வொரு நொடியையும், எனது வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன்.
இங்குள்ள சிலருக்கு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படிப்பதில் அதிக மோகம் உண்டு. கொரோனா காலத்தில், இந்தியாவில் ஏற்பட்ட அழிவு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று கூறினார்கள். பல ஆண்டுகளாக ஹார்வர்டில் ஒரு முக்கியமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த ஆய்வின் கருப்பொருள் ‘இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், வீழ்ச்சியும் தான்’.
தேர்தல் முடிவுகள் சில எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்த அமலாக்கத்துறைக்கு நான் நன்றி சொல்கிறேன்.
9 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள்
இன்று நாட்டில் உள்ள விமான நிலையங்களும், ரயில் நிலையங்களும் புத்துயிர் பெற்று வருகின்றன. 70 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் 9 ஆண்டுகளில் 70 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள நீர்வழித்தடங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய தாயின் மகன்
அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சென்று வந்தவர்கள் எப்படி அந்த மாநிலத்திற்கு சென்று வந்தார்கள் என்பது தெரியும். நானும் லால் சௌக்கில் கொடியேற்றுவேன் என்ற சபதத்துடன் ஜம்மு காஷ்மீரில் யாத்திரை சென்றுள்ளேன். அப்போது தீவிரவாதிகள் எனக்கு மிரட்டல் விடுத்தனர். “உண்மையான இந்திய தாயின் மகனாக இருந்தால் தேசிய கொடியேற்றிப் பார்” என போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். ஆனால் ஜனவரி 26ம் தேதி சரியாக காலை 11 மணிக்கு எந்த வித பாதுகாப்பு மற்றும் கவச உடையின்றி லால் சௌக்கில் நான் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினேன் என்று பிரதமர் மோடி பேசினார்.