குட்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்து ஆண்டுதோறும் இது சம்பந்தமாக அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டு வந்தது மட்டுமில்லாமல், தடையை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டவர்களின் மீது அரசு தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டும் வந்தது. மேலும் அரசின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
இதை எதிர்த்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில், புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை.
மேலும், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்துதல் சட்டத்தில் புகையிலைப் பொருள்களை விளம்பரப்படுத்துவதையும்,முறைப்படுத்துவதைப் பற்றியும் தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், புகையிலைப் பொருள்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடைவிதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவசரநிலை கருதி தற்காலிகமாகத் தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். அதில்,”குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களினால் ஏற்படும் ஆபத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- பி. ஜேம்ஸ் லிசா