“தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை”

எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ஒரு பாடலை டி.எம்.சவுந்தரராஜன் தான் பாட வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா… எந்த பாடல் அது? மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை,…

எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்த ஒரு பாடலை டி.எம்.சவுந்தரராஜன் தான் பாட வேண்டும் என வலியுறுத்தினார் ஜெயலலிதா… எந்த பாடல் அது?

மன்னரான, தன் தந்தையை கொன்று, கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை, மகன் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள தன் தாயை மீட்கும் கதை… அண்மையில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான பாகுபலி திரைப்படத்தின் கதையாக இந்த தலைமுறைக்கு தெரியலாம்.. ஆனால் எம்ஜிஆர் நடித்து 1969ல் வெளியான, அடிமைப் பெண் திரைப்படத்தின் கதையை நவீன தொழில்நுட்பம், திரைக்கதையில் மாற்றம் செய்தால், இன்றைய பாகுபலி தயாராகிவிடும்.

எம்.ஜி.ஆர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ஸ்டுடியோவிலேயே படமாக்கப்பட்டுவிடும், வெளிப்புற காட்சிகள் இருக்காது என்ற எண்ணம் இருந்த காலகட்டம். தன் படங்களின் மீதான எண்ணத்தை மாற்ற ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை, ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி போன்ற இடங்களில் படமாக்கினார் எம்ஜிஆர்.

அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடலை முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். தாயின் பெருமையை கூறும், தாயில்லாமல் நானில்லை பாடலையும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிவிட, டிஎம் சௌந்தரராஜன் பாடினால் மட்டுமே பாடல் சிறப்பு பெறும் என ஆணித்தரமாக கூறினார் ஜெயலலிதா. அவரது கருத்தை ஏற்று, டிஎம்எஸ்- சை பாட வைத்தார் எம்ஜிஆர். சென்னையில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இசையைப் பற்றி ஜெயலலிதா பேசியதை கவனித்த எம்ஜிஆர், மறுநாள் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் அழைத்து சென்று அம்மா ஜெயலலிதாவை என்றால் அன்பு என்ற பாடலை பாடவைத்தார்.

ஒரே படத்தில் கதாநாயகன், கதாநாயகி என இருவரும் இரட்டை வேடங்களில் நடித்த 2 படங்களில் அடிமைப்பெண் திரைப்படமும் ஒன்று. கடைசிக்காட்சியில் வரும் சிங்கத்துடன் சண்டையிடும் காட்சிக்காக, அந்த சிங்கத்தை தனது ராமாவரம் தோட்டத்தில் கூண்டில் அடைத்து பழகிக்கொண்டார் எம்ஜிஆர்.. அடிமைப்பெண் திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான், தனது அடையாளமான வெள்ளை தொப்பியை அணிய தொடங்கினார் எம்ஜிஆர். இரட்டைவேடத்தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது, அடிமைப்பெண்.

ஆயிரம் பாகுபலி வந்தாலும் அம்மாவின் பெருமை கூறும் அடிமைப்பெண் திரைப்படம், கருத்தால், காவியமாக விஞ்சி நிற்கிறது என்பது உண்மை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.