ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தை மாரடைப்பால் மரணம்

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் எஞ்சியிருந்த கடைசி சிறுத்தை, அதன் தங்குமிடத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி இளவரசர் பந்தர் பின் சவுத் பின் முகமது அல்…

ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் எஞ்சியிருந்த கடைசி சிறுத்தை, அதன் தங்குமிடத்திலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சவூதி இளவரசர் பந்தர் பின் சவுத் பின் முகமது அல் சவுத் CoP-11 உச்சி மாநாட்டிற்காக ஹைதராபாத் வந்திருந்தார். அப்போது அவர் ஹைதராபாத் உயிரியல் பூங்காவிற்காக ஒரு ஜோடி ஆப்பிரிக்க சிங்கங்களுடன் ஒரு ஜோடி சிறுத்தைகளை பரிசாக அளித்தார். இதில் சிறுத்தைகளுக்கு ஹிபா (பெண்) மற்றும் அப்துல்லா (ஆண்) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில். கடந்த 2020 ஆம் ஆண்டின் போதே நீண்ட காலமாக பாராப்லீஜியா நோயால் பாதிக்கப்பட்ட ஹிபா சிறுத்தை அதன் எட்டு வயதிலேயே உயிரிழந்தது. அது போல் தற்போது அப்துல்லா சிறுத்தையும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளது.

மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளின் தகவலின் படி, 15 வயதாகும் அப்துல்லா என்ற ஆண் சிறுத்தைக்கு உணவளிக்க தொழிலாளர்கள் அழைத்த போது அது எழவில்லையாம் . பலமுறை அழைத்தும் சிறுத்தை நகராமல் ஒரே இடத்தில் படுத்திருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த அவர்கள் அடைப்புக்குள் நுழைந்தனர். பின்னர் ஒரு மரத்தின் அருகே இறந்து கிடந்ததை கவனித்த உடன் , கால்நடை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு பரிசோதனை செய்து, மாரடைப்பால் இறந்ததை உறுதி செய்தனராம்.

அப்துல்லாவின் மரணத்தால் நேரு உயிரியல் பூங்கா தனது கடைசி சிறுத்தையை இழந்ததோடு, நம் நாட்டில் சிறுத்தை இனத்தை பாதுகாக்கும் முயற்சியிலும் மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டுள்ளது. காரணம், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சவூதி இளவரசர் ஒரு ஆண் மற்றும் பெண் ஜோடியை அவர்கள் இனப்பெருக்கம் செய்யும் நம்பிக்கையுடன் நன்கொடையாக அளித்தாலும், சிறைப்பிடிக்கப்பட்ட சிறுத்தைகள் இனப்பெருக்கம் செய்வது மிகவும் அரிதானது என்று மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது அப்துல்லாவின் மரணம் இந்த முயற்சியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திருந்தாலும், கடந்த 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு நம்பியாவிலிருந்து கொண்டு வந்த 8 சிறுத்தைகளை மத்தியப் பிரதேசத்தின் குணா தேசிய பூங்காவில் வளர்த்து வருவது, இந்தியாவில் சிறுத்தை இனத்தின் எண்ணிக்கையை மீண்டும் மீட்டெடுக்கும் என கூறப்படுகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.