குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள கடைநிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ . பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதினர். மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில், 1339 நில அளவர் பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கான முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானதோடு, இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில் நில அளவர் பணியிடங்ளுக்கு வெளியான தேர்வு முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரமிட் பயிற்சி மையத்தின் மூலம் நில அளவர் பணிக்காக தேர்வு எழுதியவர்களில், 742 பேர் தேர்வாகியுள்ளனர்.
ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்று பணிகளுக்கு தேர்வானது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இன்று எதிரொலித்தது. இந்தநிலையில், இது குறித்து அந்த பயிற்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.
பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் பயிற்சிமையம் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்,ஒவ்வொரு தேர்வுகளிலும் எங்கள் பயிற்சி மையத்தில் பயில்வோர் 65% பேர் தொடர்ச்சியாக தேர்வு பெற்று வருகின்றனர்.
தற்போது நில அளவர் தேர்வு எழுதியவர்கள் குரூப் 1 தேர்வுக்கு ஏற்கெனவே தயாராகி வந்தவர்கள். அதனால் அவர்களுக்கு குரூப் 4 லெவலில் உள்ள நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால் இந்த தேர்ச்சியை எட்ட முடிந்தது என விளக்கம் அளித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா