கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழப்பு: டாக்டர் மீது சரமாரி தாக்குதல்!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து மருத்துவரைத் தாக்கிய 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு…

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து மருத்துவரைத் தாக்கிய 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, வம்சி கிருஷ்ணா என்ற இளைஞர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. ஆனால் வம்சி, சிகிச்சைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வம்சியின் உறவினர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி மருத்துவர் மாற்றப்பட்டார். இருந்தும் தொடர்ந்து வம்சி யின் உடல்நிலை மோசமாகி வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் வம்சியின் உறவினர்கள் சுமார் 25 பேர் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாலை திடீரென நுழைந்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைந்த வம்சிக்கு, சிகிச்சை அளித்த மருத்துவர் அறைக்கு சென்று அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்த கம்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதையடுத்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து பஞ்சகுட்டா போலீசார், 16 பேரை கைது செய்துள்ளனர். கொரோனா நோயாளி இறந்ததை அடுத்து மருத்துவரை தாக்கிய சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.