மேகதாது அணையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்…? – அன்புமணி கேள்வி…!

மேகதாது அணை விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். மேகதாது உள்ளிட்ட எந்தவிதமான புதிய அணைகளையும் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று உச்சநீதிமன்றமும், நடுவர் மன்றமும் தெளிவாக தீர்ப்பளித்திருக்கும் நிலையில், தேவையில்லாமல் இந்த விவகாரத்தை நடுவர் மன்றத்தின் ஆய்வுக்கு கொண்டு செல்வது தமிழக விவசாயிகளுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட மேகதாது அணை சிக்கல் குறித்த தனித் தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தேன். சட்டப்பேரவையிலும் இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட தமிழக அரசு, புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இனியும் விவாதிக்கப்படக் கூடாது என்றும் கூறியிருக்கிறது. இது மிகவும் அநீதியானது.

சட்டப்பேரவையில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின் போது நீர்வளத்துறை அமைச்சரும், பொதுப்பணித் துறை அமைச்சரும் தெரிவித்த கருத்துகள் குறிப்பிடத்தக்கவை. ‘‘புதிய நடுவர் மன்றம் என்பது மேகதாது அணை கட்டுவது தொடர்பானது மட்டும் தான். இதனால் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப் பட வேண்டும் என்ற 2018&ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த மாற்றமும் ஏற்படாது’’ என்று நீர்வளத் துறை அமைச்சர் தெரிவித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கமளிக்கும் போது, ‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மீது தமிழ்நாட்டுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் தான் புதிய நடுவர் மன்றம் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு முன்வைத்திருக்கிறது’’ என்று தெரிவித்தார். இருவரின் நிலைப்பாடுகளையும் ஏற்க முடியாது.

புதிய நடுவர் மன்றம் அமைத்தாலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 177.25 டி.எம்.சி என்ற நீரின் அளவு குறையாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மாறாக, மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மேகதாது அணை சிக்கல் குறித்து விசாரிக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு போராடிப் பெற்ற உரிமைகளை தாரை வார்ப்பதாக அமைந்து விடும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதை அரசும், அமைச்சரும் ஆராய்ந்து இந்த விவகாரத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

நடுவர் மன்றம் என்பது இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட ஒரு விவகாரத்தில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான அமைப்பு ஆகும். ஆனால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான தேவையையே தமிழகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அது குறித்து நடுவர் மன்றம் அமைத்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்? ஒருவேளை புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு, மேகதாது அணையை கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம்; ஆனால், அதன் கொள்ளளவை 70 டி.எம்.சி என்பதற்கு பதிலாக 68 டி.எம்.சியாக குறைத்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தால் அதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள முடியுமா? அது காவிரி பாசன உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகி விடாதா?

உண்மையில் மேகாதாது அணை சிக்கலுக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது கர்நாடக அரசு வைக்க வேண்டிய கோரிக்கை ஆகும். ஆனால், கர்நாடகத்தின் குரலாக தமிழ்நாடு அரசு அதை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், திமுகவால் உருவாக்கப்பட்ட ஒரு யோசனையை வலியுறுத்துவதன் மூலம் திமுகவின் குரலாக த.வெ.க. ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.

கர்நாடகத்தைப் போலவே தமிழக அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மீன்டும், மீண்டும் கூறி இந்த மோசமான யோசனையை ஏற்றுக்கொள்ள ஆளுங்கட்சியும், திமுகவும் முயல்கின்றன. தமிழகத்தின் நலனுக்காகத் தான் ஒற்றுமையுடன் செயல்பட முடியும்; தமிழகத்தின் நலனுக்கு ஒரு திட்டத்தால் தீங்கு ஏற்படும் என்றால் அதை முதன் முதலில் எதிர்க்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தான் இருக்கும்.

அதேபோல், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது 1990&ஆம் ஆண்டில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அதில் 16 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு, 2007&ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதில் சில மாற்றங்களைச் செய்து 2018&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். அதில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளரும் உறுப்பினராக இருக்கிறார். அந்த அமைப்பின் அதிகாரங்கள் தொடர்பாக நிறைய குறைகள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனாலும் கூட தமிழ்நாட்டை மீறி, மேகதாது அணை சிக்கலில் அந்த அமைப்பால் எதையும் செய்து விட முடியாது.

2007&ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பிலும், 2018&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிலும், இதற்கு முன் காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களிலும் கடைமடை பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் புதிய அணையை கட்ட முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மேகதாது அணை சிக்கல் தொடர்பாக கடந்த 2025&ஆம் ஆண்டு நவம்பர் 13&ஆம் தேதி அளித்த தீர்ப்பிலும் கூட,‘‘ ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரை அந்த மாநில எந்த வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; அதில் இன்னொரு மாநிலம் தலையிட முடியாது. ஆனாலும் கூட ஒரு மாநிலத்தின் நடவடிக்கையால் இன்னொரு மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்த்து முறையிட முடியும்’’ என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டுக்கு சாதகமான சட்ட அம்சங்கள் ஆகும்.

அதுமட்டுமின்றி, மேகதாது அணை சிக்கல் தொடர்பாக மக்களவையிலும், கடிதங்களின் மூலமாகவும் தொடர்ந்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் 09.06.2015&ஆம் நாள் எனக்கு கடிதம் எழுதிய அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள், மேகதாது அணைக்கு அனுமதி கோரி எதிர்காலத்தில் விண்ணப்பிக்கப்பட்டாலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை பரிசீலிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.

மேலும்,‘‘கர்நாடகத்தில் காவிரி ஆற்றில் அணை கட்டாமல் ஓடும் நீரில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிவசமுத்திரம் நீர்மின்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மட்டுமே மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக மின்கழகம் அனுப்பியுள்ளது. மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி அந்த மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்; அப்போது தான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது’’ என்றும் அந்தக் கடிதத்தில் உமாபாரதி கூறியிருந்தார். மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், அவற்றை புறந்தள்ளி விட்டு, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தான் தீர்வு என்று த.வெ.க. அரசு கருதியிருந்தால், அதை ஏன் தனித் தீர்மானத்தில் முதலிலேயே தெரிவிக்கவில்லை? உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், திமுக வழக்கறிஞர்களும் தெரிவித்த ஆலோசனைகளின் அடிப்படையில் தான் இப்படி ஒரு நிலைப்பாட்டை அரசு எடுத்ததாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி சிக்கலில் அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்ட நிலைப்பாட்டுக்கு மாறாக புதிய நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடமும், விவசாயிகள் அமைப்புகளிடமும் விவாதித்து கருத்தொற்றுமை அடிப்படையில் தான் செய்ய முடியும். மாறாக சிலரது ஆலோசனையின் பேரில் அரசே தன்னிச்சையாக முடிவெடுத்து திணிக்க முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலைப்பாடும் இது தான். விவசாயிகளின் நலன் காப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி புதிய நடுவர் மன்றம் அமைக்கப் படுவதை ஒருபோதும் ஏற்காது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தெளிவான நிலைப்பாட்டை வகுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக அழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.