காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை

நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்…

நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதனுக்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவலர் வீட்டுவசதிவாரியம் சார்பில் கட்டப்பட்ட காவலர்கள் குடியிருப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில்  புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்களுக்காக 13 அடுக்குமாடி குடியிருப்பில் 832 வீடுகள் ரூ.100 கோடியில் கட்டப்பட்டது. வழக்கமாக ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட போலீசாருக்கு 450 சதுர அடியில் மட்டுமே வீடு கட்டப்பட்டிருக்கும். ஒரு படுக்கை வசதிகொண்ட இந்த வீட்டில் மிகுந்த சிரமத்தோடுதான் காவலர்கள் வசித்து வருவது வழக்கம். ஆனால் காவல்துறை வரலாற்றில் காவலர்களுக்காக 680 சதுர அடியில் 2 படுக்கைகள் கொண்ட வீடுகள் இம்முறைதான் கட்டப்பட்டது.

இதனால் புதிதாக செல்லும் வீட்டில் குடும்பத்துடன் சற்று வசதியாக வாழலாம் என காவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடுகளை காவல்துறையில் உள்ள சீனியர் காவலர்களுக்கு ஒதுக்குவது வழக்கம். ஆனால் பல ஜூனியர் காவலர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி இந்த குடியிருப்பில் வீடுகளை பெற முயல்வதாக சீனியர் காவலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சென்னையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் சீனியர் காவலர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக நியூஸ் 7 தமிழ் இணையத்தில் செய்தி வெளியானது. இதனையடுத்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி இதுகுறித்து சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

அப்போது பனீந்தர் ரெட்டி, காவல்துறையில் புதிதாக வீடுகளை காவலர்களுக்கு ஒதுக்குவதில் என்ன நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது எனக் கேட்டுள்ளார். மேலும், காவலர் குடியிருப்பில் சீனியர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ஜூனியர்களுக்கு ஒதுக்குவதாக செய்திகள் வருகின்றன. எனவே அதுபற்றி முழுமையான அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார். இதனால் வீடு கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்த சீனியர் காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவ.செல்லையா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.