விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில் காக்ரோச் ஜனதா பார்ட்டியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
“நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதை சட்டத்துக்குப் புறம்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம்.
காக்ரோச் ஜன்தா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. உச்சநீதிமன்றத்தில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும்.
மருத்துவக் கல்வியப் பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால், அந்த ஆர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்தின் முன்னோடிகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




