உலக வல்லரசு நாடு, வலிமையான நாடு என சுய தம்பட்டம் அடித்து வரும் , அமெரிக்க நாட்டின் வரலாற்றில் , நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய தூணாக உள்ள வங்கிகள் சரிவடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது. முக்கிய வங்கிகள் சரிவடைந்த வரலாற்றை காணலாம்.
அமெரிக்கா, இந்திய நாட்டிற்கு பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து உள்ளது. ஆனாலும், அந்நாட்டில் நிகழும் அரசியல் பொருளாதார நிகழ்வுகள் , நம் நாட்டில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகப்பொருளாதாரம்-அனைத்து நாடுகளுடனும் பின்னி பிணைந்த ஒன்றாக உள்ளது. அவ்வகையில் அமெரிக்கா வரலாற்றில், மிகப்பெரிய வங்கி சரிவுகளை பற்றிய செய்தி தொகுப்பு இது.
உலகில் புதிய பொருளாதார கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட, 1980 ஆம் ஆண்டுகளில் அன்றைய மதிப்பில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட American Savings and Loan Association வங்கி திவாலாகி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
1984 ஆம் ஆண்டு, 40 பில்லியன் மதிப்புடைய, கான்டினென்டல் இல்லினாய்ஸ் National Bank and Trust வங்கி , திவாலானது.
1991 ஆம் ஆண்டு, அன்றைய மதிப்பில் ஒன்பதரை பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்ட , பேங்க் ஆஃப் நியூ இங்கிலாந்து திவாலானது.
உலகப்பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த 2008 ஆம் ஆண்டு, 32 பில்லியன் டாலர் மதிப்புடைய ,இண்டிமேக் வங்கி திவாலானது.
307 பில்லியன் டாலர் மதிப்புடைய வாஷிங்டன் மியூச்சுவல் வங்கி , 2008 ஆம் ஆண்டு எதிர்பாராவிதமாக சரிவடைந்தது. ஒட்டு மொத்த நிதி சந்தையே அதிர்ச்சியில் உறைந்தன. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வங்கி சரிவாக இது பதிவானது.
2009 ஆம் ஆண்டு, 13 பில்லியன் டாலர் மதிப்புடைய, கேரண்டி வங்கியும் திவால் பட்டியலில் இணைந்தது. அதே,2009 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலர் மதிப்புடைய கலோனியல் வங்கியும் சரிவடைந்தது.
கொரோனா கால பேரிடரை தாண்டி, உலகப் பொருளாதாரம் ,மெல்ல மெல்ல , வீறுநடை போட ஆரம்பித்தது. ஆனாலும் நடப்பு 2023 ஆம் ஆண்டின், மார்ச் மாதம், 110 பில்லியன் டாலர் மதிப்புடைய சிக்னேச்சர் வங்கி சரிவடைந்தது. கிரிப்டோ கரன்சிகளின் பரிமாற்ற வங்கி என அறியப்பட்டது சிக்னேச்சர் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கும் புதுமை, எதிலும் புதுமை, இல்லை பழைமை என சொல்லி வந்தது சிலிக்கான் வேலி வங்கி. இவ்வங்கி பொது வெளியில் ஆதரவின்றி, அறிவாயுதம் கொண்டு செயல்படும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வெகுவாக ஆதரவளித்தது டெக் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
210 பில்லியன் டாலர் மதிப்புடைய ,சிலிக்கான் வேலி வங்கி டாலர் மதிப்பு அதிகரிப்பு, பெடரலின் வட்டி உயர்வு , ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணிகளால், நம்பிக்கையின் உச்சத்தில் இருந்து,தடாலடியாக வீழ்ச்சியை நோக்கி, விரைவாக அடைந்து விட்டது. சிலிக்கான் வேலி வங்கியின் வீழ்ச்சியால், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் 8000 கோடி ரூபாய் முடக்கம் என தகவல்கள் வருகின்றது.
இதனையும் படியுங்கள்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் – காரணம் இதுதான்..?
திவாலாகும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் டெபாசிட்டுகளுக்கு ,குறிப்பிட்ட அளவு தொகையை, அமெரிக்க அரசு நிறுவனமான FDIC வழங்கும். இதனிடையே சரிவை நோக்கி பயணித்த ,பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை 11 அமெரிக்க வங்கிகள் இணைந்து 30 பில்லியன் டாலர் முதலீடு செய்து காப்பாற்றியது, அமெரிக்க வங்கி துறை வரலாற்றில் அரிதான நிகழ்வு என்றால் மிகையில்லை.
-ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்







