ஹிண்டன்பர்க் அறிக்கையால் தொடர் சரிவு – அதானி குழுமத்தில் என்னதான் நடக்கிறது?

பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி.…

பங்குச்சந்தையில் அதானி குழுமம் தவறான தகவல்களை தருகிறது என ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அத்துடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டார் கவுதம் அதானி. அதானி குழுமத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுகிறது என்றும், மேலும் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் பார்க்கிறது என்றும் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகிறது என்றும் கூறியிருந்தது.

ஹிண்டர்பர்க் அறிக்கை எதிரொலியால், அதானி குழும நிறுவனப் பங்குகள் ஜனவரி 25ம் தேதி அன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்தன. இந்நிலையில் வாரத்தின் வர்த்தக நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதானி பங்குகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இரண்டாவது நாளாக கடும் இழப்பை சந்தித்தனர். அதானி என்டர்பிரைசஸ், அதானி பசுமை எரிசக்தி, அதானி துறைமுகம், அதானி எரிசக்தி, அதானி டோட்டல் எரிவாயு என அதன் அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இறங்குமுகமாகவே இருந்தன.

மும்பை பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகள், அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் சரிவை சந்தித்தன. இதனால் இரண்டு நாட்களில் அதானியின் சந்தை மதிப்பு நான்கு லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

அதானி டோட்டல் கேஸ் – 25%, அதானி டிரான்ஸ்மிஷன் – 27%, அதானி கிரீன் – 20%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 16%, அதானி பவர் 10%, அதானி வில்மார் 10%, என்.டி.டி.வி 10%, அதானி போர்ட்ஸ் 25%, ஏசிசி லிமிடெட் 26%, அம்புஜா சிமெண்ட்ஸ் 31% என்ற அளவில் அதானி குழுமம் சரிவை சந்தித்துள்ளது.

மொத்தமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்ததால் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்தது. அதானியின் சொத்து மதிப்பு 18 பில்லியன் டாலர்கள் சரிந்து, 100 பில்லியன் டாலர்களாக குறைந்தது. இதனால், உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்திலிருந்து ஏழாம் இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார்.

அதேபோல் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி எனப்படும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ,அதானி நிறுவனங்களை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம், ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளது. தங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என்றும், வழக்கை சந்திப்போம் என்றும் கூறியுள்ள ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், தங்கள் கேள்விகளுக்கு ஒன்றுக்கு கூட பதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக அதானி குழுமத்தை பற்றி தீவிரமாக ஆராய்ந்த பிறகே அறிக்கை வெளியிடப்பட்டது என்றும் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.