“உழவர்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் தீரும்” – அன்புமணி உழவர் நாள் வாழ்த்து!

உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவில் உழவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண்சிங் பிறந்தநாளான டிசம்பர் 23 தேசிய உழவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் அனைவருக்கும் இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் உழவர் நாள் கொண்டாடப்படும் போதிலும் உழவர்களின் நிலை தான் முன்னேற வில்லை. முன்னேறிய மாநிலம் என்று கூறப்படும் தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் துறை எதிர்மறை வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. உழவர்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.10,804 ஆக குறைந்து விட்டது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும்; உழவர்களின் துயரங்கள் அனைத்தும் தீர்ந்து, அவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அடுத்த ஆண்டு உழவர்கள் நாள் கொண்டாடப்படும் போது இந்தக் கனவு நனவாகத் தொடங்கியிருக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.