அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…

மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு,
நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன.  ஆனால் ஒரு சில தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் பள்ளி, கல்லூரி பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வந்தனர்.

அதனால், அந்த பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையில்
செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக
பாதிக்கப்படுகின்றனர்.  இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன்களை பறிமுதல் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் சென்ற நிலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷன் தலைமையில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார்,  அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் பணியாளர்கள்  ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது தனியார் பேருந்து,  அரசு பேருந்து,  பள்ளி, கல்லூரி பேருந்துகள்
என அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்தனர்.  அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது.  இதையடுத்து பேருந்துகளில் இருந்த ஏர் ஹார்ன்களை  பறிமுதல் செய்த அதிகாரிகள் மேலும் இது மாதிரியான ஹார்ன்களை பயன்படுத்தினால் அடுத்த முறை நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என எச்சரித்து அனுப்பினர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.