நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125…

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125 வது மலர் கண்காட்சி மே 19ஆம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் டேலியா, மேரிகோல்டு, பிகோனியா, ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெணுன்குலஸ் உள்ளிட்ட 325 வகையான ரகங்களில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் மலர்ந்து பூத்து துவங்கியுள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக இத்தாலியன் பூங்காவில் சுமார் 10,000 வகையான வண்ண மலர் தொட்டிகள், சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏற்றவாறு, குளிர்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

அதேப்போல் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக படைக்கும் வகையில் பூங்காவின் மலர் மாடத்தில் 35 ஆயிரம் மலர் செடிகளுடன் கூடிய தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணியை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறும் கோடை விழாவினை லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், மே 13ம் தேதி முதல் 25ம் தேதி வரை முதல்முறையாக இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் 2 ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டம் வெற்றி அடைந்தால், எதிர்வரும் கோடை விழாக்களில் ஹெலிகாப்டர் சேவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.