ஈரோடு மலைப்பகுதியில் கனமழை: திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தால் பயிர்கள் சேதம் – சோகத்தில் விவசாயிகள்!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த…

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வனப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடையில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது கத்திரி வெயில் தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக லேசான காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை செல்லும் வழியில் உள்ள மணியாச்சி ஓடையில் திடீரென காட்டாறு வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல் தாமரைக் கரையிலிருந்து மடம் மலை கிராமத்திற்கு செல்லும் பாதையிலும் வெள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் அவதியுற்றனர்.

இந்த நிலையில் அங்கு நடைபெற்று வரக்கூடிய உயர் மட்ட தரைப்பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அந்தியூர் அருகே உள்ள மாத்தூர், மறவபாளையம், கொள்ளபாளையம், ஆலாம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள பூவன், செவ்வாழை, மொந்தன், நேந்திரன், தேன் வாழை உள்ளிட்ட வாழை மரங்கள் வேருடன் முறிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வருவாய்த் துறையினர் நேரில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.