மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதித்த மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்கத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடைவிதித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா…

மேற்கு வங்கத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடைவிதித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார்.

இதுதவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் , வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், மாநிலத்தின் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.