ஸ்புட்னிக்-v தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 6,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக பதிவாகியுள்ளது. தற்போதைய நிலை நீடித்தால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை சின்ன போரூர் பகுதியில் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படுவதை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு அடுத்து வரும் 2 வாரங்கள் மிக முக்கியமான காலக்கட்டம் என்று கூறினார். 79,000 படுக்கை வசதிகள் உள்ளதாக கூறிய ஜெ. ராதாகிருஷ்ணன், அடுத்த வாரத்திற்குள் மேலும் 15,000 படுக்கைகள் தயார் செய்யப்படும் என தெரிவித்தார். ஸ்புட்னிக்-v தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மக்கள் தேவையற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.







