மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் உருமாறிய ஒமிக்ரான் வகை பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அரசின் முழுமையான வழிகாட்டுதலை இனிவரும் காலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாகப் பின்பற்றுமாறு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், பண்டிகைகள், திருவிழாக்கள், கடைவீதிகள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவது நோய் பரவலுக்கு வித்திடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பம் மற்றும் குழு பரவலில் ஒமிக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படுவதால் உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றுதல் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட வாரியாக சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவும், படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் எனவும் பொது இடங்கள் மற்றும் நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் இடங்களில் மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பின்பு அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.