ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் – அண்ணாமலை பதிவு

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்காலாமின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.   முன்னாள் குடியரசுத் தலைவர்…

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்காலாமின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.

 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27-ம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இஸ்லாமிய முறைப்படி அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தின் சார்பில் துவா ஓதி மலரஞ்சலி செலுத்தினர்.

 

இதனிடையே, அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட் என குறிப்பிட்டுள்ளார். மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார். விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவர், 440-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்று, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய இன்னும் பெறற்கரிய பலப்பல சர்வதேச விருதுகள் பெற்ற பாரதத்தின் ரத்தினம் என தெரிவித்துள்ளார்.

 

இந்திய இளைஞர்களுக்காக, 2011-ல் ஊழலை ஒழிக்க “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக இந்நாளில் தங்களை வணங்குகிறேன் என்றும் வாழ்த்துங்கள், வழிகாட்டுங்கள் என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.