நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருக்கும் நிலையில் பாதுகாப்பு மற்றும் பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை, பெரிய மேட்டில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை 4.45 மணி அளவில் சென்னை வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 22 ஆயிரம் போலீசார் ஐந்து அடுக்கு பாதுகாப்பில் நாளை ஈடுபட இருக்கிறார்கள். மேலும் ட்ரோன்கள் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்குப் பிரதமர் வரும் சாலை விழுவதுமாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ப இருப்பதால் இன்றே நேர் உள்விளையாட்டு அரங்கிற்கு வரும் வாகனங்கள் அனைத்துமே முழுமையான சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. முறையான அனுமதி அட்டை வைத்திருக்கக்கூடிய நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், நேரு உள்விளையாட்டரங்கம் அமைந்திருக்கக்கூடிய சாலை விழுவதுமாகவே சுத்தம் செய்யப்பட்டு சென்டர் மீடியன்கள் முழுவதும் புதிதாக மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்ட அரங்கத்தில் காலை 11 மணி அளவிலும், போட்டி நடைபெறக்கூடிய மாமல்லபுரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டு ஒலிம்பியாட் வீரர்களுடன் இரவு நேர உணவு அருந்த இருப்பது குறிப்பிடத்தக்கது.









