விவசாயிகள் ஆசிரியர்கள் மீதான போராட்ட வழக்குகள் வாபஸ் – சிபிஐ(எம்) வரவேற்பு!

விவசாயிகள் ஆசிரியர்கள் மீதான போராட்ட வழக்குகளை திரும்பப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ தமிழ்நாட்டில் மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களின்போது 92,000க்கும் மேலானவர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான ஆணைகளை, ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்த அடிப்படையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஏழை எளிய, நடுத்தர, உழைப்பாளி மக்கள் நடத்துகிற போராட்டங்கள் ஜனநாயகப் பூர்வமானவை ஆகும். அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மீதான கருத்துருவாக்கத்தின் ஒரு பகுதியே வீதியில் நடந்தேறுகிற போராட்டங்கள் ஆகும். ஆனால், இத்தகைய போராட்டங்கள் கடுமையான அடக்குமுறைகள், நடவடிக்கைகளுக்கு ஆளாவது என்பது தொடர் கதையாக உள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இப்போராட்டங்களின் பின்புலமாக உள்ள ஜனநாயக உள்ளடக்கத்தை உள்வாங்குவதும் மதிப்பதும் அவசியமானதாகும்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை வரவேற்கிற அதே நேரத்தில், தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிலாளர்கள், வாலிபர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாதர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட இதர பிரிவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் சட்டவிரோதமாக கூடுதல் என்ற அடிப்படையில் தான் காவல்துறையினரால் பெரும்பாலான வழக்குகள் போடப்படுகின்றன. எனவே, ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு காவல்துறை உரிய முறையில் அனுமதி வழங்குவதையும், காவல்துறை கொள்கையில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.