மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் என்பவர், காவல் நிலையக் கழிவறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறைந்த பாலகிருஷ்ணனுக்கு நீதி கேட்டும், காவல் நிலைய மரணங்களைத் தடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, இதுதொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும், பாலகிருஷ்ணனின் இறப்புக்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணனின் உடற்கூராய்வில் அவர் தாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
“மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட பாலகிருஷ்ணனின் உடற்கூராய்வில், அவர் தாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. மக்களுக்குக் காவல் நிலையத்திற்கு வெளியிலும் பாதுகாப்பில்லை, உள்ளேயும் பாதுகாப்பில்லை எனக் கொடூர ஆட்சி நடத்துபவர்கள், பாலகிருஷ்ணன் அவர்களின் இறப்பிற்கு நீதி கேட்டுப் போராடிய அவரது உறவினர்களைக் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் தவெக அரசு தனது அராஜகத்தை நிறுத்த வேண்டும். போராடியவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




