மீசக்கார நண்பி: ஆசையுடன் மீசை வளர்க்கும் அழகு பெண்

கேரளாவில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் தூக்கியெறிந்து பெண் ஒருவர் ஆசையுடன் முறுக்கு மீசை வளர்த்து வருகிறார்.   கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷைஜா (வயது 35) என்ற பெண் தன் முகத்தில்…

கேரளாவில், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதையெல்லாம் தூக்கியெறிந்து பெண் ஒருவர் ஆசையுடன் முறுக்கு மீசை வளர்த்து வருகிறார்.

 

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷைஜா (வயது 35) என்ற பெண் தன் முகத்தில் மீசை வளர்த்து வருகிறார். அவரது முறுக்கு மீசையை சிலர் கேலி செய்வார்கள். சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால், இந்தக் கருத்துகளைப் பற்றியெல்லாம் தாம் அலட்டிக் கொள்வதில்லை என்கிறார் ஷைஜா.

 

இவர் சிறுமியாக இருக்கும் போது இவருடைய முகத்தில் அதிக அளவு முடிகள் வளர்ந்துள்ளது. அப்போது இவரை பார்ப்பவர்கள், அவரின் முகத்தில் உள்ள முடியை பார்த்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். அப்போது அவர் மிகவும் மன வேதனையுடன் இருப்பாராம். பிறகு இவருக்கு அதுவே பழகிவிட்டது. எனவே ஷைஜா மீசை வளர்க்க முடிவு செய்தார். இந்த நிலையில் இவருக்கு பாலக்காடை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடந்தது அவரது கணவரும் நீ மீசை வளர்ப்பதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என கூறிவிட்டார்.

மீசை வளர்பதற்கு தான் தடையாக இருக்க மாட்டேன் என்றும் அவரது கணவர் கூறியுள்ளார். லட்சுமணன் பாலக்காட்டு பகுதியில் வயரிங் வேலை செய்து வருகிறார். இப்போது இந்த பகுதியில் உள்ள பெண்கள் கூட ஷைஜா வளர்க்கும் மீசையை கண்டு புகழ்ந்து வருகின்றனர்.

 

ஷைஜா மீசை வளர்ப்பதற்கு சிலர் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். கேலி பேசிய ஆண்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும் ஷைஜா திருப்பூர் நகரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை இப்போது இந்த பகுதியில் உள்ளவர்கள் மீசை ஷைஜா என கூறி அழைத்து வருகின்றனர். மீசை வளர்ப்பது தனக்கு இன்னும் அழகாக இருப்பதாக ஷைஜா தெரிவித்துள்ளார். தற்போது, மீசை இல்லாமல் வாழ்வதை தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை புறந்தள்ளி தனக்கு பிடித்தது போல், மீசையுடன் தான் அழகாக இருப்பதை உணரும் ஷைஜாவின் துணிவு பல பெண்களுக்கு துணிச்சலுக்கான உதாரணமாக உள்ளது என்றே சொல்லலாம்…

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.