முன்னாள் அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடிகை சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியதாகவும் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்றும் திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை என்றும் கடனாக கொடுத்த ரூ.5 லட்சம் ரூபாயை திரும்பக் கேட்டதால், பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், அவரை போலீஸ் காவலில் 2 நாட்கள் எடுத்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜூலை 3, 4 ஆம் தேதிகளில் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.







