பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மே குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுத்தங்கம். இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் குழந்தைகள் நல குழுவினர் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரை திருமணம் செய்து கொள்வதாக கட்டாயப்படுத்தி அவரை கடத்திச் சென்று செங்கல் சூளைக்கு அருகில் உள்ள கொட்டகையில் வைத்து பலமுறை வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்யா, குற்றவாளி கண்ணனுக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக ஏழு வருடம் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
பிறகு, சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதை கட்ட தவறினால் மேலும் ஒரு வருட கால சிறை தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.